வெள்ளி, 12 டிசம்பர், 2014

பெருந்துறை சிப்காட்டில் கொக்ககோலா ஆலை துவக்க முயற்சி பொதுமக்களின் அச்சத்தை போக்குமா அரசு?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் கொக்கக்கோலா ஆலை துவக்க முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகளும் பொது மக்களும் தங்களது மண் மற்றும் நீராதாரத்துக்கு பாதிப்புகள் ஏற்படும் என்று அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே பெருந்துறை சிப்காட்டில் துவக்கப்பட்டு இயங்கி வந்த சாய, சலவைப் பட்டறைகளால் சுற்று வட்டார கிராமங்களில் நீரின் நிறம் மாறி, உவர் தன்மை அதிகரித்து அப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வரும் நிலையில் கொக்கக்கோலா ஆலை அம்மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் முற்றிலும் அழிக்க வந்த அரக்கனாக கண்டு அஞ்சும் சூழல் ஏற்பட்டுள்ளது.
1977-ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமராயிருந்த ஜனதா அமைச்சரையில் தொழில் துறை அமைச்சராக இருந்தவர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ். இவர் கோக்ககோலாவை இந்தியாவை விட்டு விரட்டினார். ஆனால் ஜனதா அரசு கவிழும் வரை காத்திருந்த கோக் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் நுழைந்து காலூன்றியது. 5 ரூபாய்க்கு ஒருபாட்டில் என விற்பனையை துவக்கி பல உள்ளூர் நிறுவனங்களை அழித்தது. பின்னர் போட்டிகளை ஒழித்து விலையை பலமடங்கு ஏற்றியது.
தேனினும் இனிய இளநீரும் பதநீரும் நிறைந்த தமிழ்நாட்டில் பொது மக்கள் குறிப்பாக இளைஞர்கள் கோக், பெப்சிக்கு ஆதரவு அளித்தனர். இக்கம்பெனிகள் விளம்பரத்திற்காக நடிகர், நடிகைகளை வைத்து விளம்பரம் செய்து பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரி இறைக்கின்றன. இந்த குளிர்பான பாட்டில்களில் பூச்சிகள் செத்து மிதந்த செய்திகள் அடிக்கடி வருகின்றன. இருந்த போதிலும் விற்பனை குறையவில்லை. விற்பனை கலையில் வல்லவர்கள் இந்த வெளிநாட்டு வியாபாரிகள். கோக்கிலும் பெப்சியிலும் உடலுக்கு நன்மை தரும் விஷயங்கள் என்னன்ன உள்ளது என்று வியாபாரிக்கும் தெரியாது.
குடி மகனுக்கும் தெரியாது. குளிர்ச்சியான பானம் அவ்வளவுதான். மேலும் இக்குளிர்பானங்களால் பாத்திரத்தை விளக்கினால் பாத்திரம் பளீரென இருக்கும். இப்பானத்தை குடித்தால் குடல் சுவர்களை அரித்து எடுத்து விடும். இது யாருக்கும் தெரியாது. ஆனால் பிரதமர் மோடி வெளிநாட்டு நிறுவனங்களை விரும்பி அழைக்கிறார். இந்தியா வளமான வேட்டைக்காடு, இந்தியாவுக்கு வாருங்கள். சுதேசிகளின் ரத்தத்தைக் குடிக்கும் அக்டோபசாக மாறுங்கள். வாருங்கள், வாருங்கள் என மறைமுகமாக அழைக்கிறார்.சுருக்கமாக சொன்னால் மோடியை ராபர்ட் கிளைவாக பார்க்கிறார்கள், வாரன் ஹேஸ்டிங்காக பார்க்கிறார்கள் இத்தகைய நிறுவனங்கள் தாங்கள் தொடங்க இருக்கும் பகுதியில் தங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் கூலிக்கு மாரடிக்கும் ஆட்களை உருவாக்குவார்கள்.
மக்களுக்கு பல உதவிகள் செய்வதாக வாக்களிப்பார்கள். நடிப்பார்கள். அவ்வளவு தான். சில ஆண்டுகளுக்கு முன் 8 மாவட்டங்களில் அபாயகரமான கழிவுகளை கொண்ட ஒரு நிறுவனம் பெருந்துறை சிப்காட்டில் அமைக்க திட்டமிட்டதற்கு கடும் எதிர்ப்பினை பொது மக்கள் காட்டியதன் விளைவாக அத்திட்டம் கும்மிடிப்பூண்டிக்கு சென்றது. இத்திட்டம் குறித்து அரசுக்கு அப்போதைய மாவட்ட ஆட்சியர் சுடலைக்கண்ணன் எழுதிய அறிக்கையில் இப்பகுதியில் ஏற்கனவே சாயப்பட்டறை தொழிற்சாலை கழிவுகளால் மண் வளம் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவோ அதிகாரிகள் இருந்தும் தவறு செய்யும் நிறுவனங்களை கண்காணிக்க முடிவதில்லை. மக்கள் உடல் நலம் பாதிக்கும் என அச்சப்படுகிறார்கள். கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்திட்டம் செயல்படுத்தினால் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்து போராடுவார்கள். எனவே மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என எழுதினார்.இதன் பின்னர் பெருந்துறை அருகே செங்கப்பள்ளியில் அனல் மின் நிலைய திட்டம் அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பால் துவக்கப்படவில்லை.
பெருந்துறை சிப்காட்டில் ஒரு பிரபல தனியார் சிமெண்ட் ஆலை, முனிசிபாலிடிகளின் நச்சுத் தன்மை உள்ள திட மற்றும் திரவ கழிவுகளை சேகரித்து சிமெண்டுக்கான கச்சாப் பொருளை உருவாக்கும் திட்டத்துக்கு மாசுக்கட்டுப்பாடு அலுவலகமே எதிர்ப்பு தெரிவித்து கைவிட அறிக்கை அனுப்பியது.இப்போது புதிய கோக்ககோலா நிறுவனம் தண்ணீரை எங்கிருந்து பெற உள்ளது ? உற்பத்தியின் போது வெளியேறும் கழிவு நீரை எப்படி சுத்திகரிப்பு செய்யப்போகிறார்கள்? சுற்று வட்டார கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், கால்நடைகள் பாதிக்கப்படுமா ?
என்பது போன்ற தகவல்களை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார்கள். கம்பெனியின் திட்ட அறிக்கையை ரகசியமாக வைத்திராமல் அருகிலுள்ள உள்ளாட்சிகளின் பார்வைக்கு கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு அனுப்ப வேண்டும். கூட்டத்தில் கேள்வி கேட்கும் பொது மக்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும். கருத்துக் கேட்புக் கூட்டத்தை பெருந்துறையில் அனைத்து செய்தித்தாள்களிலும் விளம்பரப்படுத்தி கூட்டவேண்டும்.தொழிற்சாலைகள் நாட்டிற்கு தேவை. இதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. ஆனால் கண்ணை விற்று சித்திரம் வாங்க முடியாது அல்லவா? மக்களுக்கு ஒரு சதம் கூட பாதிப்பு இல்லை என்று நூற்றுக்கு நூறு உறுதி செய்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை. தவறும் பட்சத்தில் கிராமங்கள் இருக்கும். அதில் மக்கள் இருக்கமாட்டார்கள். ஏனெனில் கிராமங்கள் மயானங்களாக மாறி இருக்கும் என்பது உறுதியான எச்சரிக்கை.(ந.நி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக