‘மறந்து
கொண்டேயிருப்பது மக்களின் இயல்பு..வரலாற்றை நினைவு கொள்ள தூண்டிக்
கொண்டேயிருப்பதுபுரட்சியாளர்களின் கடமை...’
-எரிக்ஹாப்ஸ்வாம் —
கட்டுரையை வாசிப்பதற்கு முன் இந்த
புகைப்படத்தை சற்றே உற்று கவனியுங்கள்.. இந்த தேசம் இவரை மறந்திருக்காது..
இவரது பெயர் குத்புதீன் அன்சாரி.. 2002 ஆண்டு மார்ச் 1 ம் தேதியன்று
குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.. அன்றைக்கு
அன்சாரிக்கு வயது 28.. சம்பவங்கள் நடந்து பத்தாண்டுகளுக்கும் மேலாகிறது..
ஆனால் அவற்றை நினைத்துப் பார்த்தால் இன்றும் மெலிதாக உடல் நடுங்குகிறது
அன்சாரிக்கு... அனைத்தையும் மறக்கவே நினைக்கிறேன்.. ஆனால் வரலாறு திரும்பி
விடுமோ என்ற அச்சம் மட்டும் விலக மறுக்கிறது என பழைய நினைவுகளை அசைபோடும்
அன்சாரியின் ஆட்டோகிராப் அவரது வார்த்தைகளிலேயே..
கோடைக்காலமாக
இருப்பினும் கூட அன்றைக்கு பகல் பொழுதில் வானம் கருத்திருந்தது.. எங்கும்
புகை மூட்டம்.. அச்சத்தோடும், அபயக் குரல்களை எழுப்பியவாறும் மக்கள்
அங்குமிங்குமாக ஓடிக்கொண்டேயிருந்தனர்.. நகரமே பைத்தியம் பிடித்ததை
போலிருந்தது.. நான் முதல் மாடியில் இன்னும் சிலரோடு நின்று கொண்டிருந்தேன்.
நாங்கள் நின்று கொண்டிருந்த கட்டிடத்தின் தரைத் தளத்திற்கு ஒரு கும்பல்
ஆவேசமாக வந்து தீ வைக்க, பற்றியெறியும் நெருப்பிற்கு மத்தியில்
செய்வதறியாது திகைத்து நின்று கொண்டிருந்தோம்.. மறுபுறம் ஒரு கூட்டம்
கைகளில் வாள்களோடும், கற்களோடும் ஓ என குறியிடப்பட்ட கட்டிடங்களை நோக்கி
ஓடிக்கொண்டிருந்தனர்..
உயிர் போனாலும் கூட யாரும் யாரையும் நேராக
சந்திக்கக் கூட வாய்ப்பற்ற அந்த சூழலில் தான், அந்த தெருவிற்குள் ஒரு காவல்
படையின் மீட்பு வாகனம் நுழைந்தது.. துணிச்சலை வரவழைத்துக் கொண்டு ஓடிச்
சென்று எங்கள் உயிரை காப்பாற்றுங்கள் என நான் கதறிய காட்சியை தான் அந்த
புகைப்படத்தில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.. என நினைவு கூரும்
அன்சாரி மேலும் தொடர்கிறார்.. சம்பவம் நடந்ததற்கு அடுத்த நாள் பல்வேறு
ஊடகங்களில் வெளியான அந்த புகைப்படம் என் வாழ்க்கையையே புரட்டி போட்டு
விட்டது..
நான் எங்கு சென்றாலும் அது என்னை விடாமல் துரத்திக்
கொண்டேயிருந்தது.. முதலில் என்னை எனது வேலையிலிருந்தும், பிறகு எனது
மாநிலத்திலிருந்தும் கூட நான் வெளியேறுவதற்கு அந்த புகைப்படமே ஒரு
காரணமாகவும் அமைந்தது.. குஜராத்திலிருந்து வெளியேறிய நான் மகாராஷ்ட்ராவில்
உள்ள மாலேகான் நகரத்தில் எனது சகோதரிகளுடன் தஞ்சம் அடைந்தேன்.. அங்கு ஒரு
இடத்தில் பணியில் சேர்ந்து பணியாற்ற துவங்கிய ஒரு சில நாட்களிலேயே எனது
அந்த பத்திரிக்கை புகைப்படத்தை பார்த்த நிறுவனத்தின் முதலாளி உடனடியாக
என்னை பணியிலிருந்து நீக்கி என்னை வெளியேறச் சொல்லி விட்டார்..
அதன்
பிறகு சில காலம் மகாராஷ்டிராவில் அங்குமிங்குமாக அலைந்து விட்டு, மேற்கு
வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு சென்று ஒரு பணியில் சேர்ந்து சில ஆண்டுகள்
பணியாற்றினேன்.. அப்போது குஜராத்தில் வசித்த எனது தாயாருக்கு இதய நோய்
இருப்பதாகவும், சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் வந்த செய்தி என்னை
மீண்டும் குஜராத்திற்கு வரவழைத்தது.. என தனது அனுபவங்களை பகிர்ந்து
கொள்ளும் குத்புதீன் அன்சாரி தற்போது தனது வாழ்நாள் சேமிப்பிலிருந்து
ரூ.3,15,000/- லட்சத்திற்கு ஒரு சிறு வீட்டை விலைக்கு வாங்கி, அதில் ஒரு
பகுதியையே தனது தையலகமாக அமைத்து தையல் தொழிலை செய்து வருகிறார்.. நான்,
எனது குடும்பம், மாதம் சுமார் ரூ.7000/- வருமானம் வரும் எனது தொழில் என
வாழ்க்கை அப்படியே ஓடிக்கொண்டிருக் கிறது என பழைய நினைவுகளை சுமந்தபடி
வாழும் குத்புதீன் அன்சாரிக்கு தற்போது ஜிஷான் என்ற எட்டு வயதான மகனும்,
ஜாகியா எனும் நான்கு வயது மகளும் உள்ளனர்..
கலவரங்கள் நடந்த கால
கட்டத்திற்கு பிறகு பிறந்த குழந்தைகள் இன்றைக்கு அந்த புகைப்படத்தை
காட்டி, அதற்கான காரணத்தை கேட்கிற போது அப்பாவான அன்சாரி என்ன சொல்வதென்று
தெரியாமல் மௌனமாக புன்னகைக்கிறார்.. ஜிஷான், ஜாகியா மட்டுமல்ல.. அவர்களைப்
போலவே 2002 ற்கு பின்னர் பிறந்த கோடிக்கணக்கான குழந்தைகள் நம்மை நோக்கி
கேட்கிற போது நம்மிடம் என்ன பதில் இருக்கிறது.. கட்டுரையை முடிக்கும்
முன்பு மீண்டும் ஒரு முறை அந்த புகைப்படத்தை பாருங்கள்.. உயிரை
காப்பாற்றுங்கள் என அன்றைக்கு கதறிய அந்த கூப்பிய கைகளும், பெருகும்
கண்ணீரும் இன்றைக்கும் ஏதோவொன்றை இந்த தேசத்திடம் வேண்டுகிறதே.. அது
என்ன.. அதை புரிந்து கொள்ள முற்படுவதோடு, நிச்சயம் நிறைவேற்றுவோம் என சபதம்
ஏற்பதுமே மதச்சார்பின்மை தேசத்தின் மாண்பு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக