போக்குவரத்து ஊழியர் ஆவேசம்வேலை நிறுத்தம்
அரசுப் பேருந்துகள் முடங்கின சாலைகள் வெறிச்சோடின
சென்னை, டிச.28-
தமிழக அரசு, போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்களுடன் மாநில அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மாநிலம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒருநாள் முன்கூட்டியே ஞாயிறன்று (டிச. 28) தொடங்கியது. பிரச்சனைகளை பேசித்தீர்க்க போக்குவரத்துத்துறை அமைச்சர் முன்வரவேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்களும் கேட்டுக்கொண்டுள்ளன.
ஏமாற்றும் அதிமுக அரசு
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் காலவாதியாகிவிட்டதால் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தாமல் அதிமுக அரசு ஏமாற்றி வருகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்ற வழக்கை விரைந்துமுடிக்க வேண்டும் என்று கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சித்தலைவர்கள் வலியுறுத்தியபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிமுக அரசு காலம் தாழ்த்திவருகிறது.
இந்த நிலையில் திருச்சியில் கூடிய அனைத்து தொழிற்சங்கங்களின் சிறப்பு மாநாட்டில் வேலைநிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதையடுத்து மாநிலஅரசு எந்த தொழிற்சங்கத்தையும் அழைக்காமல் தன்னிச்சையாக இடைக்கால நிவாரணம் அறிவித்தது. நிலுவையில் உள்ள அனைத்துக் கோரிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத்தீர்வு காண வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
முத்தரப்பு பேச்சுவார்த்தை
இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் சென்னையில் உள்ள தொழிலாளர் நலஆணையர்அலுவலகத்தில் சிறப்பு ஆணையர் யாஷ்மீன் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சில முக்கியமான கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் ஒருநாள் முன்னதாக ஞாயிறன்றே வேலைநிறுத்தம் தொடங்கியது. இதனால் அரசுப் பேருந்துகள் ஒட்டுமொத்தமாக முடங்கின; சாலைகள் வெறிச்சோடின.
பல்லவன் இல்லம் முற்றுகை
தலைநகர் சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பல்லவன் இல்லம் உள்பட அனைத்து டெப்போக்களிலும் தொழிலாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவொற்றியூர், அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, திருவான்மியூர், அடையாறு, மந்தைவெளி, அயனாவரம் உள்பட பல டெப்போக்கள் வெறிச்சோடிக் கிடந்தன.கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்திலும் வெளியூர் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்திலும் முழுவேலைநிறுத்தம் நடைபெற்றுவருகிறது.
திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமையன்று இரவே வேலைநிறுத்தம் தொடங்கியது. விழுப்புரம், வேலூர், கடலூர், திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, விருதுநகர், ஈரோடு, திருப்பூர் உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கியமான நகரங்களிலும் போக்குவரத்து தொழிலாளர்களும், ஊழியர்களும் முழு அளவில் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.
அதிமுகவினரும் பங்கேற்பு
தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் அதிமுக தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றுள்ளனர். பல இடங்களில் ஆளும் கட்சியினர் வேலைநிறுத்தத்தை முறியடிக்க திட்டமிட்டபோதும் அதையும் மீறி கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை ஏற்று அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.
இதனால் அனைத்து டெப்போக்களிலும் பேருந்து நிலையங்களிலும் பணிமனைகளிலும் பேருந்துகள் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னையில் ஆளும் கட்சியினரை வைத்து காவல்துறை உதவியுடன் பேருந்துகளை இயக்கமுயன்றனர். ஆனால் யாரும் முன்வராத காரணத்தால் அதுதோல்வியடைந்தது.
முதலமைச்சர் ஆலோசனை
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் தொடங்கியதையடுத்து எழுந்துள்ள நிலைமையை சமாளிப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்கு வரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்துப்பேசினார். காவல்துறை தலைமை இயக்குநர், போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் உள்பட பலர்இதில் கலந்துகொண்டனர்.
இதனிடையே கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் அனைத்துதொழிற்சங்கங்களையும் அழைத்துப்பேச வேண்டும் என்று தொமுச., சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி,எச்எம்எஸ், மற்றும் தேமுதிக,மதிமுக, பாமக தொழிற்சங்கங்கள் உள்பட 11 சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
கோரிக்கைகள் என்ன?
தமிழகத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 1.9.2013 முதல் நடைமுறைப்படுத்த வேண்டிய ஊதிய ஒப்பந்தம் குறித்து அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் 21 அம்ச பொதுக் கோரிக்கைகள் மாநில அரசிடம் ஏற்கனவே வழங்கப்பட் டுள்ளன.அதனடிப்படையில் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் அரசு அழைத்து ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும். அநியாய தண்டனைகளைக் கைவிட வேண்டும், அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்தவர்கள் மீது தன்னிச்சையாக அபராதம் விதிக்கப்பட்டதையும், அதனைக் காரணம்காட்டி பதவி உயர்வு, ரெவ்யூ வழங்காததால் பாதிக்கப்பட்டுள்ள 6 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்கவேண்டும், ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும்.
தொழில்நுட்பப் பணியாளர்களை அதிகப்படுத்த வேண்டும், தினக்கூலித் தொழிலாளர்களுக்கு ஒப்பந்தக்கூலி வழங்க வேண்டும், 240 நாள் பணி முடித்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 100 சதவீதம் பஞ்சப்படியில் 2 மாதம் நிலுவையும், 107 சதவீத பஞ்சப்படியை நிலுவைத்தொகையுடன் விரைந்து வழங்க வேண்டும், தினக் கூலி சேமப்பணியாளர் தின ஊதியத்தை 526ரூபாயாக உயர்த்த வேண்டும்,1.4.2013க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு 2010 ஊதியஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஷரத்துகளை அமல்படுத்தி பென்சன் வழங்க வேண்டும், மத்திய அரசு கொண்டு வர உள்ள சாலைப் பாதுகாப்பு முன்வடிவைக் கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
பேச்சு நடத்துக: சிபிஎம்
சென்னை : போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ஞாயிறன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் பழைய ஊதிய ஒப்பந்தம் காலாவதியாகி 15 மாதங்கள் ஆனபிறகும் இதுவரையில் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் உருவாகவில்லை. ஊதிய உயர்வு புதிய ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டுமென சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டிசம்பர் 26 அன்று தொழிலாளர் துறை சிறப்பு துணை ஆணையர் முன்பு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. 11 தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டன. ஒப்பந்தக் காலம், நிலுவைத் தொகை வழங்குவது ஆகிய பிரச்சனைகளில் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அரசு ஏற்றாலும் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையான ஊதிய உயர்வு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை துவக்க வேண்டுமென்ற கோரிக்கையை அரசு ஏற்க மறுத்துவிட்டது. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை குறித்து எந்த உறுதியையும் போக்குவரத்து நிர்வாகம் அளிக்கவில்லை. இதனால், ஏற்கனவே தொழிற்சங்கங்கள் முடிவெடுத்த அடிப்படையில் வேலைநிறுத்தப் போராட்டம் 29ம் தேதியி லிருந்து துவங்க இருந்தது.
ஆனால், போக்குவரத்து நிர்வாகம் போராடும் தொழிலாளர்களுடைய இம்மாத ஊதியத்தை வெட்டியதால் மாநிலம் முழுவதும் தொழிலாளர்கள் அனைவரும் ஞாயிறன்றே போராட்டத்தை துவக்கியுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான வேலைநிறுத்தப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆதரிக்கிறது. தொழிலாளர்களுயை போராட்டத்தை உடைப்பதற்கு திருவண்ணாமலை உள்ளிட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் பணிமனைக்குள் புகுந்து தாக்குவதாக தகவல்கள் வருகின்றன.
இத்தகைய தவறான அணுகுமுறையை மாநில அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.தொழிலாளர்களுடைய ஆதங்கத்தை உணர்ந்து மாநில அரசு உடனே அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உருவாக்கிட பேச்சுவார்த்தையை நடத்தி சுமூகமாக பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது
=== நன்றி தீக்கதிர் ====
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக