பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரி கோவையிலுள்ள மத்திய தொழிலாளர் அமலாக்கத்துறை அலுவலரிடம் ஒப்பந்த தொழிலாளர்கள் மனு அளித்தனர்.பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒப்பந்த ஊழியர்களாக சுமார் 800க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். தற்பொழுது இவர்களுக்கு குறைந்த அளவிலான ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் தினக்கூலியாக பணிபுரிந்து வருபவர்களுக்கு தற்போது குறைந்த அளவிலேயே மாதச்சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் அச்சம்பளமும் முறையாக மாதத்தின் முதல் வாரத்தில் வழங்கப்படாமல் 20 மற்றும் 25ம் தேதிகளில் வழங்கும் நிலை உள்ளது. எனவே, இதனை முறைப்படுத்தி மாதத்தின் முதல் வாரத்திலேயே சம்பளம் வழங்க வேண்டும். ரூ.15ஆயிரத்தை குறைந்தபட்ச மாதச்சம்பளமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவை சிவானந்த காலனியில் உள்ள மத்திய தொழிலாளர் அமலாக்கத்துறை அலுவலர் திவாகரனிடம் செவ்வாயன்று ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டுமனு அளித்தனர். மேலும், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் சி. வினோத்குமார், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் கே.சந்திரசேகர், உதவித் தலைவர் கே.மாரிமுத்து, வி.வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக