கோவை மாவட்ட சி.ஐ.டி.யு தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சி. பத்மநாபன் பேட்டி 20ஆண்டுகளுக்கு முன் ஒரு லட்சம் தொழிலாளர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றிதோல்வியை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக இருந்தார்கள். இன்றைக்கு அதே தொழிலில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் இரவு பகலாகப் பாடுபட்டு, பலமடங்கு உற்பத்தியைத் தந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த உழைக்கும் பெண்களிடமிருந்து ஒரு ஓட்டுகூடத் தேர்தலில் பதிவாகப் போவதில்லை. அது மட்டுமல்ல, தேர்தலுக்கான சிறு உந்துதலைக்கூட அந்தத் தொழில் ஏற்படுத்துவதில்லை. கோவை பஞ்சாலைத் தொழிலாளர்களின் நிலை இதுதான்.
தென்னிந்திய மான்செஸ்டரின் இன்றைய நிலை
1920-ம் ஆண்டிலிருந்து 1990-ம் ஆண்டு வரை கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டராகத் திகழ்ந்தது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்தத் தொழிலின் மூலமாக வாழ்க்கைக்குத் தேவையான அளவு ஊதியம் பெற்றார்கள். அதன் விளைவு, அந்தத் தொழிலாளிகளின் குழந்தைகள் நல்ல கல்வியறிவைப் பெற்றார்கள்; அவர்கள் வளர்ந்து பல்வேறு சிறுதொழில்கள் தொடங்கினார்கள்; தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களில் நல்ல வேலைகளுக்கும் சென்றார்கள். சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்,1971-ம் ஆண்டு அரசுப் பணியில் இருந்த ஒருவரின் மாத ஊதியம் ரூ. 220. ஒரு பஞ்சாலைத் தொழிலாளி அப்போது பெற்ற மாதச் சம்பளமோ ரூ. 760. ஆனால், 1990-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவில் உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் அமல்படுத்தப் பட்ட பிறகு, பஞ்சாலைத் தொழிலாளிகளின் நிலை அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. முன்பு, பஞ்சாலைகள் நிறுவு வதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை அரசு வகுத்திருந்தது. தாராளமயமாக்கலுக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் பஞ்சாலைகளை ஆரம்பிக்கலாம் என்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. விளைவு, புதிய பஞ்சாலைகள், நவீன இயந்திரங்கள்… அதற்கேற்ப புதிய ஆட்களும் வேலைக்குத் தேவைப்பட்டனர். அதற்காக வெளிமாவட்டங்களிலிருந்து 18 வயதுகூட நிரம்பாத பெண்களை கேம்ப் கூலி, சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் ஆலைகளில் தங்கவைத்து வேலை வாங்க ஆரம்பித்தனர் முதலாளிகள். பி.எஃப், ஈ.எஸ்.ஐ, போனஸ், பஞ்சப்படி, 8 மணி நேர வேலை அளவு, தொழிற்சங்கத்தில் சேரும் உரிமை, ஆலைகள் தரும் குடியிருப்புகள், ஆலைகளின் கல்விக்கூடங்கள், கூட்டுறவு பண்டகசாலை ஆகியவற்றை இப்போது கைகழுவியாகிவிட்டது. கேம்ப் கூலி முறை வந்த பிறகு, தொழிலாளர் என்ற உரிமை இல்லை. குறைந்தபட்ச ஊதியம்கூடக் கிடையாது. தொழிலாளர்களுக்கான எந்த நலச்சட்டங்களும் பின்பற்றப்படுவதில்லை.
நிலை மாறுமா?
கொத்தடிமை முறைதான் இந்த கேம்ப் கூலிப் பெண் தொழிலாளர்களிடம் பின்பற்றப்படுகிறது. 18 முதல் 21 வயது வரையிலான பெண்கள் இங்கே 40 ஆயிரம் பேர் தங்கள் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்திலேயே இப்படிப்பட்ட கடும் சுரண்டலுக்குத் தொடர்ந்து ஆளாகிவருகிறார்கள். உச்ச நீதிமன்றம், “குறைந்தபட்சக் கூலியை உழைப்பாளிக்குத் தர முடியவில்லையென்றால்,
அந்தத் தொழிலையே நடத்தக் கூடாது” என்று பகிரங்கமாகவே சொல்லியிருக்கிறது. ஆனால், இங்கே மட்டும் 660 பஞ்சாலைகளில் கேம்ப் கூலி என்று 40 ஆயிரம் இளம்பெண்கள் தினம் ரூ.150 கூடப் பெறாத நிலையில் 20 ஆண்டுகளாகச் சுரண்டப்பட்டுவருகிறார்கள். குறைந்தபட்சக் கூலியில் சுரண்டல் கணக்கு மட்டும் பார்த்தால் ஒரு நாளைக்கு ரூ. 40 லட்சம், மாதத்துக்கு ஏறத்தாழ ரூ.10 கோடி. சந்தைக்கு வந்து புழங்க வேண்டிய இந்தப் பணமெல்லாம் முதலாளிகளின் பணப் பெட்டிக்குத்தான் போகிறது. பொங்கல், தீபாவளிக்கு மட்டும் பத்திரமாக ஊருக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு, திரும்பவும் கூட்டிவந்து கொட்டடியில் அடைக்கும் முதலாளிகள் ஓட்டுப்போட மட்டும் இவர்களை அனுமதித்துவிடுவார்களா என்ன? இவர்களுக்குத் தொழிற்சங்க உரிமையும் கிடையாது, வாக்களிக்கும் உரிமையும் கிடையாது என்றால், தங்கள் உரிமைகளை எப்படித்தான் பெறுவார்கள்?
இது 40
ஆயிரம் பெண்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல; அவர்கள் குடும்பங்களும் சம்பந்தப்பட்டது. குறைந்தபட்சத் தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்தவாவது இன்றைய அரசியல்கட்சிகள் ஒருமித்த முடிவு எடுக்க வேண்டும். எனவே, இவர்களுக்கு முறையான சம்பளத்தைப் பெற்றுத்தருவோம். அவர்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்துவோம் என்பதையே தேர்தல் அறிக்கையில் இடம்பெற வைக்க வேண்டும். இதுதான் வரும் தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் செய்ய வேண்டிய கடமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக